Thursday, November 5, 2009

நாம் தமிழர் - மும்பையில் சீமான் கர்ஜனை - தனித் தமிழகத்திற்கு அடிக்கல்




மும்பையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் என்ற தமிழர் அரசியல் அமைப்பின் துவக்கத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் இயக்குனர் தமிழர் சீமான்.

நவம்பர் 4ம் தேதி சயான் கோலிவாடாவில் நாம் தமிழர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் இப்போது லட்சக்கணக்கான மக்கள் கட்டாந்தரைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை தட்டிக்கேட்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழக மின்சாரம் தரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை நீடிக்கிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றனர். அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் இந்த பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழர்கள் ஜாதி மற்றும் கட்சிகளால் பிரிந்து கிடப்பதே காரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே.
இந்தியா தமிழர்களை இந்தியர் என்று பார்க்கவில்லை. எனவேதான் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை. பாலஸ்தீனம், கொசாவா போன்று உலகம் முழுவதும் நடைபெறும் விடுதலை போராட்டங்களை ஆதரிக்கும் இந்தியா தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. இதற்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியை தமிழன் கொன்றான் என்று கூறுகிறதே தவிர இந்திரா காந்தியை சீக்கியன் கொலை செய்தான் என்று கூறுவதில்லை. காங்கிரஸ் மற்றும் திராவிடர் பெயர் கொண்ட கட்சிகள் தமிழர்களை தமிழர்களாக மதிக்கவில்லை.
இதற்கு தமிழர்கள் ஜாதி, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர் என்று ஒன்றிணைய வேண்டும். நாம் தமிழர் என்ற அமைப்பு சி.பா. ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்னர் கைவிடப்பட்ட அந்த அமைப்பின் பெயரில் இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது இலங்கையில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கொன்று குவிக்கப்பட்ட தினமான மே 17-ஐ நினைவுறுத்தும் வகையில் 2010 ம் ஆண்டு அதே தேதியில் முறையாக துவக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தை வென்று எடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் அமைப்பின் மாநில செயலாளர் டி. ராஜேந்திரன் தொகுத்து வழங்கிய இந்த கூட்டத்தில நாம் தமிழர் அமைப்பின் மாநில தலைவர் அர்ஜூன், மாநில அமைப்பாளர் சூசை, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பொருளாளர் தம்பி செல்வம், கேப்டன் தமிழ்ச் செல்வன், கன்னிவெடி கந்தசாமி, பன்னீர், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் பேசினர். சயான்கோலிவாடா தட்டாங்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

மும்பையில் நாம் தமிழர் அமைப்பில் இணைய தொடர்புகொள்ளவும் டி.ராஜேந்திரன் : 9029548608