Thursday, November 5, 2009

நாம் தமிழர் - மும்பையில் சீமான் கர்ஜனை - தனித் தமிழகத்திற்கு அடிக்கல்




மும்பையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் என்ற தமிழர் அரசியல் அமைப்பின் துவக்கத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் இயக்குனர் தமிழர் சீமான்.

நவம்பர் 4ம் தேதி சயான் கோலிவாடாவில் நாம் தமிழர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் இப்போது லட்சக்கணக்கான மக்கள் கட்டாந்தரைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை தட்டிக்கேட்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழக மின்சாரம் தரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை நீடிக்கிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றனர். அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் இந்த பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழர்கள் ஜாதி மற்றும் கட்சிகளால் பிரிந்து கிடப்பதே காரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே.
இந்தியா தமிழர்களை இந்தியர் என்று பார்க்கவில்லை. எனவேதான் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை. பாலஸ்தீனம், கொசாவா போன்று உலகம் முழுவதும் நடைபெறும் விடுதலை போராட்டங்களை ஆதரிக்கும் இந்தியா தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. இதற்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியை தமிழன் கொன்றான் என்று கூறுகிறதே தவிர இந்திரா காந்தியை சீக்கியன் கொலை செய்தான் என்று கூறுவதில்லை. காங்கிரஸ் மற்றும் திராவிடர் பெயர் கொண்ட கட்சிகள் தமிழர்களை தமிழர்களாக மதிக்கவில்லை.
இதற்கு தமிழர்கள் ஜாதி, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர் என்று ஒன்றிணைய வேண்டும். நாம் தமிழர் என்ற அமைப்பு சி.பா. ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்னர் கைவிடப்பட்ட அந்த அமைப்பின் பெயரில் இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது இலங்கையில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கொன்று குவிக்கப்பட்ட தினமான மே 17-ஐ நினைவுறுத்தும் வகையில் 2010 ம் ஆண்டு அதே தேதியில் முறையாக துவக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தை வென்று எடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் அமைப்பின் மாநில செயலாளர் டி. ராஜேந்திரன் தொகுத்து வழங்கிய இந்த கூட்டத்தில நாம் தமிழர் அமைப்பின் மாநில தலைவர் அர்ஜூன், மாநில அமைப்பாளர் சூசை, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பொருளாளர் தம்பி செல்வம், கேப்டன் தமிழ்ச் செல்வன், கன்னிவெடி கந்தசாமி, பன்னீர், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் பேசினர். சயான்கோலிவாடா தட்டாங்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

மும்பையில் நாம் தமிழர் அமைப்பில் இணைய தொடர்புகொள்ளவும் டி.ராஜேந்திரன் : 9029548608

Tuesday, November 3, 2009

விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தாராவியில் திருவிளக்கு பூஜை

விசுவ ஹிந்து பரிஷத் (தாராவி) சார்பாக தாராவியில் 2008 மஹா திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாராவி மெயின்ரோடு, கோலி மைதானத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது. உலக நன்மை, ஜாதி, இனம், மொழி மோதல்கள் மறைய வேண்டி நடத்தப்படும் இந்த பூஜையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday, November 2, 2009

தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது

மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் 61-ம் ஆண்டு விழா, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாட்டுங்கா லேபர் கேம்ப் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சங்கரன் தலைமை தாங்க, சங்கத் தலைவர் கே.பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தாராவி பகுதி எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், நவாப், ஓய்பெற்ற எம்டிஎன்எல் உதவி பொது மேலாளர் சந்திரசேகர், முப்பிடாதி, உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், செயலாளர் ஜீவமணி, பொருளாளர் சுப்பையா, துணைத் தலைவர் நயினார், துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மும்பை களிகை சேவா சங்கம் வாழ்த்து



நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மகர்த்தா எஸ். ஆனந்த ராஜாவுக்கு மும்பை கள்ளிகுளம் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sunday, November 1, 2009

சந்திரோதயா போக்ரே மரணம்

நவிமும்பை கலம்போலியில் வசித்து வந்த சந்திரோதயா நாராயண் போக்ரே கடந்த அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். மராத்தியரான போக்ரே நவிமும்பை ஏபிஎம்சி மார்க்கெட்டில் டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஆவார். இவர் தமிழர் மராட்டியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவருக்கு நவம்பர் 1ம் தேதி காலை 9.25 மணியளவில் கலம்போலி சௌரப் கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கலம்போலி தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த பல தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விஜய் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா



அம்பிவிலி திப்பன்னா நகரில் அக்டோபர் 31ம் தேதி நடிகர் விஜய் மக்கள் இயக்க கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மும்பை மாநகரத் தலைவரான ஏ.விஜய் மணி மன்றக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் ஐயப்பன், திரிசங்கு, ஜி. தினேஷ், டி.வடிவேல், வெங்கடேஷ், பாண்டியன், பாபு முதலானோர் கலந்துகொண்டனர். விழாவில் வேட்டி, சேலை, இலவச நோட்டுப்புத்தகம், பேனா வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

வங்கியில் போடாத பணம்


வங்கியில் போடாத பணத்தை
எடுக்க முடியாதது போல
புத்தகங்கள் படிக்காத வரை
எழுத முடியாது -
உருதுக் கவிஞன் சைஃபி