Sunday, November 22, 2009

விஜய டி. ராஜேந்தருக்கு வரவேற்பு




மும்பை வந்த டி. ராஜேந்தருக்கு மராட்டிய மாநில பார்கவகுல சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜுஹூவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பார்கவகுல சங்கத்தின் மாநில தலைவர் ராஜா உடையார், செயலாளர் கே. தென்னரசு, வடகிழக்கு மும்பை மாநில அமைப்பாளர் எம்.ஏ. சாமி, வடகிழக்கு மும்பை மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் பார்கவகுல மாவட்ட செயலாளருமான எஸ். செல்வராஜ், மத்திய மும்பை மாவட்ட சங்க செயலாளர் அறிவழகன், ஏ. அண்ணாத்துரை, செந்தில், பழனி, நல்லு உடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 9, 2009

வர்ஷா கெய்க்வாடிற்கு சிட்டிஸன் ஃபோரம் வாழ்த்து


தாராவி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் உயர்கல்வித்துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா சிட்டிஸன்போரம் அமைப்பின் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. சுந்தர், துணைத்தலைவர் என்.வி. குமார், இளைஞரணித் தலைவர் எம்.ஏ.சாமி, சயான் கோலிவாடா பகுதி தலைவர் ஏ. பெருமாள் தேவன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பிரதீக்ஷா நகரில் உள்ள வர்ஷா கெய்க்வாடின் வீட்டிற்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைப்பைச் சேர்ந்த கண்ணன் தேவேந்திரா, கணேஷ் தேவேந்திரா, விஜய் அமிர்தராஜ், அன்சார் அலி, நூர் இஸ்மாயில், பாதர் அலங்காரம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மும்பையில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது

மும்பையில் நவம்பர் 6,7,8 தேதிகளில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது. பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பால் தினகரன் குடும்பத்தினர் கலந்துகொண்டு தேவ செய்திகளை வழங்கினர். இந்த செய்திகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த பிரார்த்தனை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை கமிட்டியின் தலைவர் குல் கிரப்லனி, தலைமை பாஸ்டர் சேகர் கல்லியான்புர், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளர் பிரயன் லோபோ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சோமன் தாமஸ், பாஸ்டர் சம்பத் குமார், தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் முதலானோர் செய்திருந்தனர்.

Thursday, November 5, 2009

நாம் தமிழர் - மும்பையில் சீமான் கர்ஜனை - தனித் தமிழகத்திற்கு அடிக்கல்




மும்பையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் என்ற தமிழர் அரசியல் அமைப்பின் துவக்கத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் இயக்குனர் தமிழர் சீமான்.

நவம்பர் 4ம் தேதி சயான் கோலிவாடாவில் நாம் தமிழர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் இப்போது லட்சக்கணக்கான மக்கள் கட்டாந்தரைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை தட்டிக்கேட்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழக மின்சாரம் தரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை நீடிக்கிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றனர். அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் இந்த பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழர்கள் ஜாதி மற்றும் கட்சிகளால் பிரிந்து கிடப்பதே காரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே.
இந்தியா தமிழர்களை இந்தியர் என்று பார்க்கவில்லை. எனவேதான் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை. பாலஸ்தீனம், கொசாவா போன்று உலகம் முழுவதும் நடைபெறும் விடுதலை போராட்டங்களை ஆதரிக்கும் இந்தியா தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. இதற்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியை தமிழன் கொன்றான் என்று கூறுகிறதே தவிர இந்திரா காந்தியை சீக்கியன் கொலை செய்தான் என்று கூறுவதில்லை. காங்கிரஸ் மற்றும் திராவிடர் பெயர் கொண்ட கட்சிகள் தமிழர்களை தமிழர்களாக மதிக்கவில்லை.
இதற்கு தமிழர்கள் ஜாதி, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர் என்று ஒன்றிணைய வேண்டும். நாம் தமிழர் என்ற அமைப்பு சி.பா. ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்னர் கைவிடப்பட்ட அந்த அமைப்பின் பெயரில் இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது இலங்கையில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கொன்று குவிக்கப்பட்ட தினமான மே 17-ஐ நினைவுறுத்தும் வகையில் 2010 ம் ஆண்டு அதே தேதியில் முறையாக துவக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தை வென்று எடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் அமைப்பின் மாநில செயலாளர் டி. ராஜேந்திரன் தொகுத்து வழங்கிய இந்த கூட்டத்தில நாம் தமிழர் அமைப்பின் மாநில தலைவர் அர்ஜூன், மாநில அமைப்பாளர் சூசை, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பொருளாளர் தம்பி செல்வம், கேப்டன் தமிழ்ச் செல்வன், கன்னிவெடி கந்தசாமி, பன்னீர், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் பேசினர். சயான்கோலிவாடா தட்டாங்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

மும்பையில் நாம் தமிழர் அமைப்பில் இணைய தொடர்புகொள்ளவும் டி.ராஜேந்திரன் : 9029548608

Tuesday, November 3, 2009

விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தாராவியில் திருவிளக்கு பூஜை

விசுவ ஹிந்து பரிஷத் (தாராவி) சார்பாக தாராவியில் 2008 மஹா திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாராவி மெயின்ரோடு, கோலி மைதானத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது. உலக நன்மை, ஜாதி, இனம், மொழி மோதல்கள் மறைய வேண்டி நடத்தப்படும் இந்த பூஜையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday, November 2, 2009

தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது

மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் 61-ம் ஆண்டு விழா, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாட்டுங்கா லேபர் கேம்ப் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சங்கரன் தலைமை தாங்க, சங்கத் தலைவர் கே.பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தாராவி பகுதி எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், நவாப், ஓய்பெற்ற எம்டிஎன்எல் உதவி பொது மேலாளர் சந்திரசேகர், முப்பிடாதி, உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், செயலாளர் ஜீவமணி, பொருளாளர் சுப்பையா, துணைத் தலைவர் நயினார், துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மும்பை களிகை சேவா சங்கம் வாழ்த்து



நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மகர்த்தா எஸ். ஆனந்த ராஜாவுக்கு மும்பை கள்ளிகுளம் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.