Tuesday, November 24, 2009

மல்டி லெவல் மார்க்கெட்டிங்(எம்எல்எம்) என்ற மாயவலை

புதிய/புரியாத தொழில்

தமிழகத்தில் அவ்வப்போது தலைகாட்டி வருவதுதான் சீட்டுக்கம்பெனி மோசடிகள். ஆனால் தற்போது மற்றொரு புரியாத தொழிலாக மக்களை ஆசை மோகத்தில் அலைக்கழித்து வருவதுதான் எம்எல்எம் என சுருக்கமாக அழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (தமிழில் பல மட்ட வியாபாரம் என்று கூறலாம்). இதனை ஆங்கிலத்தில் நெட்வொர்க் மார்கெட்டிங் என்றும் கூறுவர். இது சீட்டுக் கம்பெனிகளுக்கு அடுத்த தொழிலோ என்று கேட்கத் தோன்றுகிறது. இது பற்றி இந்த கட்டுரையில் அலசி ஆராய்வோம்.

இந்த தொழிலில் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஒரு நிறுவனம்தான் கோல்ட் கொஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். அண்மையில் தமிழகத்தில் இந்நிறுவனம் பெரும் மோசடியை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சேர்க்கை

இந்தியாவில் தீவிரமாக பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் எது என்று இந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிறுவனங்களில் சேரும் புதியவர்களுக்கு அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் கூறும் அறிவுரை, நீங்கள் யாருக்கும் எதையும் கூறாதீர்கள், உங்களுக்கு தெரிந்தவர்களை (மீட்டிங்) கூட்டத்திற்கு கூட்டிவாருங்கள் என்பதுதான். இதில் சில நிறுவனங்கள் பார்ட்டைம் ஜாப், புல் டைம் ஜாப், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள் என்று விளம்பரம் செய்வதுடன் கையில் துண்டுச் சீட்டை திணித்து ஆள்ச் சேர்க்கின்றனர்.

பயிற்சி

இவ்வாறு சேர்க்கப்படும் புதியவர்கள் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் அல்லது தானே செல்வர். இந்த மீட்டிங் ஒரு திருப்புமுனையாக இருக்கும் அல்லது இருக்கும் என்று சொல்லப்படும். இந்த கூட்டத்திற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த கூட்டத்தில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட தலைசிறந்த பேச்சாளர்கள் (அவர்கள் பேசுவது அரசியல், இலக்கியம் அல்லது மதப் பேச்சாளர்களை போல இருக்காது – இதுதான் வியாபார பேச்சோ?, சில நேரம் இது எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமா என்று கேட்கத் தோன்றும்). சாதாரணமாக இருந்த தாங்கள் சாதித்தது என்ன என்று பட்டியலிடும் இவர்கள் ஒன்றுக்குமே உதவாத நானே இதைச் செய்யும்போது உங்களால் சாதிக்க முடியாதா என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள். இவ்வாறு அந்த நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை உள்ளவர்கள் பேசி முடிக்க இறுதியில் முக்கிய பேச்சாளருக்கு கீழ் உள்ளவரும் அதன் பின் முக்கிய பேச்சாளரும் பேசுவர்.

இவர்களது பேச்சு எல்லர்மே நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த நீங்களும் வெளி ஆட்களும் உரையாடுவதாக இருக்கும். முக்கியமாக நீங்கள் வேலை இல்லாதவராக அல்லது குறைந்த வருமானம் உள்ளவராக இருந்தால் உங்களை கவருவதாக இருக்கும். முக்கிய பேச்சாளருக்கு கீழ்நிலையில் உள்ளவர், நிறுவனத்தின் விவரம் சொத்து மதிப்பு, விற்பனை செய்யும் பொருட்கள், முன்னேற்றம், சேர்ந்துள்ள வியாபாரிகளின் எண்ணிக்கை, சட்ட அங்கீகாரம், முக்கிய புள்ளிகளின் சான்றிதழ், உங்களுக்கு உள்ள வாய்ப்புகள், சுருக்கமாக செய்ய வேண்டியது என்ன(எத்தனை பேரை சேர்த்து விடுவது) என்பது பற்றி கூறி, இது ஒரு பொன்னான வாய்ப்பு தேர்ந்தெடுப்பதும் கைவிடுவதும் உங்கள் கையில் உள்ளது என்று கூறி முடிப்பார். இவர் பணவீக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி பற்றி கூறி அதிகம் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தை கூறுவார். இவர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரமாக தங்களுக்கு வந்த செக்-களை காட்டுவார். அவை அனைத்தும் உண்மையே. ஆனால் அந்த செக்-களை வரவழைப்பது பிரம்ம பிரயத்தனம் என்பது நடைமுறையில் புரியும்.

இறுதியில் வரும் பேச்சாளர் தனது பொருளாதார நிலை, அனுபவம், வெற்றியை பற்றிக் கூறி கடைசியில் கண்டிப்பாக சேர வேண்டியதில்லை என்பதை கண்டிப்பில்லாமல் கண்டிப்பாக கூறுவார். இதில் ஏழைகளுக்கு பண ஆசை, சாதாரண மனிதர்களுக்கு வெற்றியின் ஆசை, பணக்காரர்களுக்கு அந்தஸ்து ஆசை என்று அனைத்து சுவைகளும் கலந்து பேசியிருப்பார். இதற்குள் நீங்கள் ஏழையாக இருந்தால் பணம் சாம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம், சாதாரணமாக இருந்தால் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருக்கும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள். இந்த உணர்வு 90% சதவீதம் பேருக்கு ஏற்படுவது இயற்கையே. (இவர்கள் கூறும் சாதனை என்பது என்ன? மயிரைக் கட்டி மலையை இழுப்பது. யாராவது அவ்வாறு இழுக்க முடியுமா? அவ்வாறு இழுத்து விட்டால் அதனை சாதனை என்றுதான் கூற முடியுமா?)


ஆண்டு உறுப்பினர் கட்டணம்

அடுத்த கட்டம் நிறுவனத்தில் சேருவது. பொதுவாக தங்களது விற்பனை பொருட்கள் ஒன்றை வாங்கி நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கூறுவர். இதில் டூத் பேஸ்ட் முதல் துணிகள் வரை இருக்கலாம். இதன் விலை + சேர்க்கை கட்டணம் இதில் வசூலிக்கப்படும். (ஓராண்டுக்குப் பின் விற்பனையாளர் உறுப்பினர் கட்டணம் ஒன்று வசூலிக்கப்படும் அதை யாரும் பேசமாட்டார்கள்.) இது வரை ஒரு பிரச்சனையும் இல்லை. சேர்ந்த பின்னர் வியாபார பயிற்சிக்கு வருமாறு கூறுவர். பயிற்சி என்பது இந்த கூட்டங்களுக்கு ஆட்களை கொண்டு செல்வதும் கூட்டங்களுக்கு தவறாது வருகை தருவதும்தான்.

ஆட்சேர்க்கும் விஷயத்தில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதிமுறையை கொண்டுள்ளன. ஒரு நிறுவனம் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்து விடலாம் என்றும் ஒரு நிறுவனம் இரண்டே இரண்டு பேரை சேர்த்து விட்டால் போதும் என்றும் பல விதங்களில் கூறப்படும். இது கேட்க எளிதாக இருக்கும் செயல்படுத்தும்போது மலையை இழுக்கும் விஷயம் என்று புரியும்.

இதற்கு பல காரணங்கள் கூறப்படலாம் எம்எல்எம் என்பது நமது நாட்டிற்கு புதியது, புரிவது கடினம் என்று. அடுத்தது, இந்த நிறுவனங்களை பற்றி யாருக்கும் தெரியாது(இதற்கு அவர்கள் கூறும் பதில் எம்எல்எம்-க்கு எதிரான விளம்பரங்களை நிறுவனங்கள் செய்வதில்லை என்பது. ஆனால் தங்களை பற்றி பிரபலமாக கூறும் இந்த நிறுவனங்களை பற்றி பத்திரிகைகள், டிவிக்கள், அல்லது வர்த்தக பத்திரிகைகள் கூட எழுதாததுதான் ஆச்சரியமான விஷயம்).

தேவையில்லாத பொருட்கள் / கூடுதல் விலை
அடுத்தது விற்பனை செய்யச் செர்ல்லும் பொருட்கள். இவை ஒன்றுக்கும் ஆகாத பொருட்களாக அல்லது தேவையே இல்லாத பொருட்களாக இருக்கும். இவற்றின் விலையும் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கும்.

சில நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் பைக், இன்ஷூரன்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றன. பைக்-களை ஷோரூம்களில் வாங்குவதுடன் ஒப்பிட்டால் விலையில் 2-3 ஆயிரங்கள் கூடுதலாக விற்கப்படுகிறது. கேட்டால் எம்எல்எம் என்றால் அப்படித்தான் என்கிறார்கள்.

ஆனால் உண்மையில் ஒரு நிறுவனம் எம்எல்எம் முறையில் வியாபாரம் செய்கிறது என்றால் ஒரு பொருளின் விலை எம்ஆர்வி-யிலிருந்து (அதிகபட்ச விற்பனை விலை) குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் எம்ஆர்பி விலையை விட சிறிதளவு அதிகமாக அல்லது மிக அதிகமாக விற்பனை செய்கின்றன. இது எம்எல்எம் வர்த்தகத்திற்கு எதிரானது.

சிலர் நிறுவனங்களில் சேர்ந்து விட்டாலும் வேலை எதுவும் செய்யாமல் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு மேலே இருப்பவர்கள் உங்களை தூண்டி சம்பாதிக்க தூண்டுவார். அல்லது உங்களது நிம்மதியை கெடுத்து விடுவார். ஆனால் சில நிறுவனங்கள் சேர்ந்தாச்சு, விஷயங்களை கூறிவிட்டோம், பொருட்கள் இருக்கின்றன, அவற்றை விற்பனை செய்வதும் ஆள்சேர்ப்பதும் உங்களது திறமை என்று விட்டுவிடுவார்கள். இதில் சேர்ந்து விட்டவர்கள் தங்களால் இயன்ற அளவு வேலை செய்துவிட்டு பின்னர் பணம் போனால் போகிறது என்று விட்டுவிடுவார்கள். சிலர் முடிந்தவரை பார்ப்போம் என்று முடிந்த வரை ஆள் சேர்ப்பர்.

ஆனால் அதிகமான ஆட்களை சேர்த்து விடுவதில் உள்ள நிபந்தனைகள், தங்க நாணயம் போன்ற விலை அதிகமான பொருட்களை அல்லது தேவையில்லாத பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்தல் போன்றவை வியாபாரமே இல்லை மோசடி வேலை என்று கூறும் அளவிற்கு உள்ளன. கோல்ட் கொஸ்ட் நிறுவனத்தை பொறுத்தவரை ரூ. 30,000 கட்டணத்தில் ஒரு தங்க நாணயத்தை வாங்கி விற்பனையாளராக சேர வேண்டும். அந்த நாணயத்தின் விலை ரு. 10,000 இருக்குமா என்பது சந்தேகமே.

Monday, November 23, 2009

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபார முறை

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரம் என்பது ஒரு நுணுக்கமான வியாபார முறை. இது மேற்கத்திய நாடுகளில் இன்னமும் சிறப்பாகவே நடந்து வருகிறது. பொதுவாக எந்த ஒரு வியாபார பொருளும் உற்பத்தியாளர்களிடமிருந்து பல கைகள் மாறி வாடிக்கையாளரை வந்தடைகிறது. இதனால் அந்த பொருளின் மதிப்பு தோராயமாக 4 முதல் 10 மடங்கு வரை அதிகரித்து விடுகிறது.

உதாரணமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய ரூ. 10 செலவாகிறது என்றால் அது நுகர்வோரை அடையும்போது அதன் விலை தோராயமாக ரூ. 40 முதல் ரூ. 100 வரை ஆகிவிடுகிறது. இதில் தோராயமாக 20% முதல் 50% போக மீதியுள்ள தொகை ஸ்டாகிஸ்ட், ஏரியா டீலர், ஹோல் சேல் வியாபாரி ஆகியோருக்கு லாபமாக கிடைக்கிறது. இதில் பெருந்தொகை விளம்பரம் செய்யப் பயன்படுகிறது. இதுதான் எம்எல்எம்-களின் பிரச்சாரமே. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சச்சின் தெண்டுல்க்கர், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் விளம்பரத்தின் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கின்றனர். இந்த பிரமுகர்களை வைத்து விளம்பரம் செய்யாமல் நுகர்வோரை வைத்தே விளம்பரம் செய்து இவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுப்பதே இந்த வியாபாரத்தின் திட்டம்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டம் என்னவென்றால் இந்த இடைத்தரகர்களை அகற்றிவிட்டு பொருட்களை நேரடியாக சாதாரண மக்களான நுகர்வோரே விற்பனை செய்வதுதான். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் இந்த வியாபாரத்தின் நோக்கம் மற்றும் கொள்கை.

இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் திட்டம். குறிப்பாக விளம்பரத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகையை மிச்சப்படுத்தி அதனை நுகர்வோருக்கு அளிப்பதுதான் இந்த எம்எல்எம். இதன்படி ஒரு விலைக்கு பொருளை வாங்கும் ஒருவர் அதன் அருமை பெருமைகளை தனக்கு தெரிந்தவருக்கு கூற அவர்களும் அதே பொருளை வாங்குகின்றனர். அந்த பொருளை விற்றதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை அவரை சிபாரிசு செய்தவருக்கு அளிப்பதுதான் இந்த எம்எல்எம்-மின் அடிப்படை கொள்கை.

Sunday, November 22, 2009

விஜய டி. ராஜேந்தருக்கு வரவேற்பு




மும்பை வந்த டி. ராஜேந்தருக்கு மராட்டிய மாநில பார்கவகுல சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜுஹூவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பார்கவகுல சங்கத்தின் மாநில தலைவர் ராஜா உடையார், செயலாளர் கே. தென்னரசு, வடகிழக்கு மும்பை மாநில அமைப்பாளர் எம்.ஏ. சாமி, வடகிழக்கு மும்பை மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் பார்கவகுல மாவட்ட செயலாளருமான எஸ். செல்வராஜ், மத்திய மும்பை மாவட்ட சங்க செயலாளர் அறிவழகன், ஏ. அண்ணாத்துரை, செந்தில், பழனி, நல்லு உடையார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 9, 2009

வர்ஷா கெய்க்வாடிற்கு சிட்டிஸன் ஃபோரம் வாழ்த்து


தாராவி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் உயர்கல்வித்துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா சிட்டிஸன்போரம் அமைப்பின் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. சுந்தர், துணைத்தலைவர் என்.வி. குமார், இளைஞரணித் தலைவர் எம்.ஏ.சாமி, சயான் கோலிவாடா பகுதி தலைவர் ஏ. பெருமாள் தேவன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பிரதீக்ஷா நகரில் உள்ள வர்ஷா கெய்க்வாடின் வீட்டிற்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைப்பைச் சேர்ந்த கண்ணன் தேவேந்திரா, கணேஷ் தேவேந்திரா, விஜய் அமிர்தராஜ், அன்சார் அலி, நூர் இஸ்மாயில், பாதர் அலங்காரம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மும்பையில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது

மும்பையில் நவம்பர் 6,7,8 தேதிகளில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது. பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பால் தினகரன் குடும்பத்தினர் கலந்துகொண்டு தேவ செய்திகளை வழங்கினர். இந்த செய்திகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த பிரார்த்தனை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை கமிட்டியின் தலைவர் குல் கிரப்லனி, தலைமை பாஸ்டர் சேகர் கல்லியான்புர், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளர் பிரயன் லோபோ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சோமன் தாமஸ், பாஸ்டர் சம்பத் குமார், தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் முதலானோர் செய்திருந்தனர்.

Thursday, November 5, 2009

நாம் தமிழர் - மும்பையில் சீமான் கர்ஜனை - தனித் தமிழகத்திற்கு அடிக்கல்




மும்பையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் என்ற தமிழர் அரசியல் அமைப்பின் துவக்கத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் இயக்குனர் தமிழர் சீமான்.

நவம்பர் 4ம் தேதி சயான் கோலிவாடாவில் நாம் தமிழர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சீமான் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் இப்போது லட்சக்கணக்கான மக்கள் கட்டாந்தரைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை தட்டிக்கேட்க முடியவில்லை. காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழக மின்சாரம் தரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை நீடிக்கிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுகின்றனர். அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் இந்த பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழர்கள் ஜாதி மற்றும் கட்சிகளால் பிரிந்து கிடப்பதே காரணம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே.
இந்தியா தமிழர்களை இந்தியர் என்று பார்க்கவில்லை. எனவேதான் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை. பாலஸ்தீனம், கொசாவா போன்று உலகம் முழுவதும் நடைபெறும் விடுதலை போராட்டங்களை ஆதரிக்கும் இந்தியா தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை. இதற்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியை தமிழன் கொன்றான் என்று கூறுகிறதே தவிர இந்திரா காந்தியை சீக்கியன் கொலை செய்தான் என்று கூறுவதில்லை. காங்கிரஸ் மற்றும் திராவிடர் பெயர் கொண்ட கட்சிகள் தமிழர்களை தமிழர்களாக மதிக்கவில்லை.
இதற்கு தமிழர்கள் ஜாதி, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர் என்று ஒன்றிணைய வேண்டும். நாம் தமிழர் என்ற அமைப்பு சி.பா. ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்னர் கைவிடப்பட்ட அந்த அமைப்பின் பெயரில் இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது இலங்கையில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கொன்று குவிக்கப்பட்ட தினமான மே 17-ஐ நினைவுறுத்தும் வகையில் 2010 ம் ஆண்டு அதே தேதியில் முறையாக துவக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தை வென்று எடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் அமைப்பின் மாநில செயலாளர் டி. ராஜேந்திரன் தொகுத்து வழங்கிய இந்த கூட்டத்தில நாம் தமிழர் அமைப்பின் மாநில தலைவர் அர்ஜூன், மாநில அமைப்பாளர் சூசை, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பொருளாளர் தம்பி செல்வம், கேப்டன் தமிழ்ச் செல்வன், கன்னிவெடி கந்தசாமி, பன்னீர், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் பேசினர். சயான்கோலிவாடா தட்டாங்குட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

மும்பையில் நாம் தமிழர் அமைப்பில் இணைய தொடர்புகொள்ளவும் டி.ராஜேந்திரன் : 9029548608

Tuesday, November 3, 2009

விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தாராவியில் திருவிளக்கு பூஜை

விசுவ ஹிந்து பரிஷத் (தாராவி) சார்பாக தாராவியில் 2008 மஹா திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாராவி மெயின்ரோடு, கோலி மைதானத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது. உலக நன்மை, ஜாதி, இனம், மொழி மோதல்கள் மறைய வேண்டி நடத்தப்படும் இந்த பூஜையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday, November 2, 2009

தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது

மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் தேவேந்திர குல வேளாளர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் 61-ம் ஆண்டு விழா, இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாட்டுங்கா லேபர் கேம்ப் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சங்கரன் தலைமை தாங்க, சங்கத் தலைவர் கே.பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தாராவி பகுதி எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், நவாப், ஓய்பெற்ற எம்டிஎன்எல் உதவி பொது மேலாளர் சந்திரசேகர், முப்பிடாதி, உத்தமன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், செயலாளர் ஜீவமணி, பொருளாளர் சுப்பையா, துணைத் தலைவர் நயினார், துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மும்பை களிகை சேவா சங்கம் வாழ்த்து



நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மகர்த்தா எஸ். ஆனந்த ராஜாவுக்கு மும்பை கள்ளிகுளம் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sunday, November 1, 2009

சந்திரோதயா போக்ரே மரணம்

நவிமும்பை கலம்போலியில் வசித்து வந்த சந்திரோதயா நாராயண் போக்ரே கடந்த அக்டோபர் 25ம் தேதி மரணமடைந்தார். மராத்தியரான போக்ரே நவிமும்பை ஏபிஎம்சி மார்க்கெட்டில் டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஆவார். இவர் தமிழர் மராட்டியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார். அவருக்கு நவம்பர் 1ம் தேதி காலை 9.25 மணியளவில் கலம்போலி சௌரப் கோ-ஆபரேடிவ் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கலம்போலி தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த பல தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விஜய் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா



அம்பிவிலி திப்பன்னா நகரில் அக்டோபர் 31ம் தேதி நடிகர் விஜய் மக்கள் இயக்க கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மும்பை மாநகரத் தலைவரான ஏ.விஜய் மணி மன்றக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில் ஐயப்பன், திரிசங்கு, ஜி. தினேஷ், டி.வடிவேல், வெங்கடேஷ், பாண்டியன், பாபு முதலானோர் கலந்துகொண்டனர். விழாவில் வேட்டி, சேலை, இலவச நோட்டுப்புத்தகம், பேனா வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

வங்கியில் போடாத பணம்


வங்கியில் போடாத பணத்தை
எடுக்க முடியாதது போல
புத்தகங்கள் படிக்காத வரை
எழுத முடியாது -
உருதுக் கவிஞன் சைஃபி

செ. அப்பாத்துரைக்கு மனிதநேய விருது

மராட்டிய மாநில சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் 5வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ப்ராம்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளரும், செல்லத்தங்க அறக்கட்டளை நிறுவனருமான செ. அப்பாத்துரைக்கு மனித நேய விருது வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநில முன்னாள் தலை செயலாளர் வி.ரெங்கநாதன் ஐஏஎஸ் இந்த விருதினை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு லேபர் விங் பொதுச் செயலாளர் எஸ். முருகேசன், டாக்டர் கே. எஸ். மணி மற்றும் கவிஞர் குணா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விருதுக்கு பரிந்துரை செய்த மராட்டிய மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ். மணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் நடைபெறும் ஜெபத் திருவிழாவில் டாக்டர் பால் தினகரன் பங்கேற்கிறார்


மும்பையில் நவம்பர் 6,7 மற்றும் 8ம் தேதிகளில் மாலை 5.30 மணியளவில் பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸ் திடலில் டாக்டர் பால் தினகரன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று தேவ செய்தி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிய விரும்புபவர்கள் 022-25007733, 9930955928 எண்களில் தொடர்புகொள்ளலாம்.