Tuesday, November 24, 2009

மல்டி லெவல் மார்க்கெட்டிங்(எம்எல்எம்) என்ற மாயவலை

புதிய/புரியாத தொழில்

தமிழகத்தில் அவ்வப்போது தலைகாட்டி வருவதுதான் சீட்டுக்கம்பெனி மோசடிகள். ஆனால் தற்போது மற்றொரு புரியாத தொழிலாக மக்களை ஆசை மோகத்தில் அலைக்கழித்து வருவதுதான் எம்எல்எம் என சுருக்கமாக அழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (தமிழில் பல மட்ட வியாபாரம் என்று கூறலாம்). இதனை ஆங்கிலத்தில் நெட்வொர்க் மார்கெட்டிங் என்றும் கூறுவர். இது சீட்டுக் கம்பெனிகளுக்கு அடுத்த தொழிலோ என்று கேட்கத் தோன்றுகிறது. இது பற்றி இந்த கட்டுரையில் அலசி ஆராய்வோம்.

இந்த தொழிலில் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஒரு நிறுவனம்தான் கோல்ட் கொஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். அண்மையில் தமிழகத்தில் இந்நிறுவனம் பெரும் மோசடியை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சேர்க்கை

இந்தியாவில் தீவிரமாக பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் எது என்று இந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிறுவனங்களில் சேரும் புதியவர்களுக்கு அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் கூறும் அறிவுரை, நீங்கள் யாருக்கும் எதையும் கூறாதீர்கள், உங்களுக்கு தெரிந்தவர்களை (மீட்டிங்) கூட்டத்திற்கு கூட்டிவாருங்கள் என்பதுதான். இதில் சில நிறுவனங்கள் பார்ட்டைம் ஜாப், புல் டைம் ஜாப், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள் என்று விளம்பரம் செய்வதுடன் கையில் துண்டுச் சீட்டை திணித்து ஆள்ச் சேர்க்கின்றனர்.

பயிற்சி

இவ்வாறு சேர்க்கப்படும் புதியவர்கள் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் அல்லது தானே செல்வர். இந்த மீட்டிங் ஒரு திருப்புமுனையாக இருக்கும் அல்லது இருக்கும் என்று சொல்லப்படும். இந்த கூட்டத்திற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த கூட்டத்தில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட தலைசிறந்த பேச்சாளர்கள் (அவர்கள் பேசுவது அரசியல், இலக்கியம் அல்லது மதப் பேச்சாளர்களை போல இருக்காது – இதுதான் வியாபார பேச்சோ?, சில நேரம் இது எல்லாமே திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமா என்று கேட்கத் தோன்றும்). சாதாரணமாக இருந்த தாங்கள் சாதித்தது என்ன என்று பட்டியலிடும் இவர்கள் ஒன்றுக்குமே உதவாத நானே இதைச் செய்யும்போது உங்களால் சாதிக்க முடியாதா என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள். இவ்வாறு அந்த நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை உள்ளவர்கள் பேசி முடிக்க இறுதியில் முக்கிய பேச்சாளருக்கு கீழ் உள்ளவரும் அதன் பின் முக்கிய பேச்சாளரும் பேசுவர்.

இவர்களது பேச்சு எல்லர்மே நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த நீங்களும் வெளி ஆட்களும் உரையாடுவதாக இருக்கும். முக்கியமாக நீங்கள் வேலை இல்லாதவராக அல்லது குறைந்த வருமானம் உள்ளவராக இருந்தால் உங்களை கவருவதாக இருக்கும். முக்கிய பேச்சாளருக்கு கீழ்நிலையில் உள்ளவர், நிறுவனத்தின் விவரம் சொத்து மதிப்பு, விற்பனை செய்யும் பொருட்கள், முன்னேற்றம், சேர்ந்துள்ள வியாபாரிகளின் எண்ணிக்கை, சட்ட அங்கீகாரம், முக்கிய புள்ளிகளின் சான்றிதழ், உங்களுக்கு உள்ள வாய்ப்புகள், சுருக்கமாக செய்ய வேண்டியது என்ன(எத்தனை பேரை சேர்த்து விடுவது) என்பது பற்றி கூறி, இது ஒரு பொன்னான வாய்ப்பு தேர்ந்தெடுப்பதும் கைவிடுவதும் உங்கள் கையில் உள்ளது என்று கூறி முடிப்பார். இவர் பணவீக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி பற்றி கூறி அதிகம் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தை கூறுவார். இவர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரமாக தங்களுக்கு வந்த செக்-களை காட்டுவார். அவை அனைத்தும் உண்மையே. ஆனால் அந்த செக்-களை வரவழைப்பது பிரம்ம பிரயத்தனம் என்பது நடைமுறையில் புரியும்.

இறுதியில் வரும் பேச்சாளர் தனது பொருளாதார நிலை, அனுபவம், வெற்றியை பற்றிக் கூறி கடைசியில் கண்டிப்பாக சேர வேண்டியதில்லை என்பதை கண்டிப்பில்லாமல் கண்டிப்பாக கூறுவார். இதில் ஏழைகளுக்கு பண ஆசை, சாதாரண மனிதர்களுக்கு வெற்றியின் ஆசை, பணக்காரர்களுக்கு அந்தஸ்து ஆசை என்று அனைத்து சுவைகளும் கலந்து பேசியிருப்பார். இதற்குள் நீங்கள் ஏழையாக இருந்தால் பணம் சாம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம், சாதாரணமாக இருந்தால் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருக்கும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள். இந்த உணர்வு 90% சதவீதம் பேருக்கு ஏற்படுவது இயற்கையே. (இவர்கள் கூறும் சாதனை என்பது என்ன? மயிரைக் கட்டி மலையை இழுப்பது. யாராவது அவ்வாறு இழுக்க முடியுமா? அவ்வாறு இழுத்து விட்டால் அதனை சாதனை என்றுதான் கூற முடியுமா?)


ஆண்டு உறுப்பினர் கட்டணம்

அடுத்த கட்டம் நிறுவனத்தில் சேருவது. பொதுவாக தங்களது விற்பனை பொருட்கள் ஒன்றை வாங்கி நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கூறுவர். இதில் டூத் பேஸ்ட் முதல் துணிகள் வரை இருக்கலாம். இதன் விலை + சேர்க்கை கட்டணம் இதில் வசூலிக்கப்படும். (ஓராண்டுக்குப் பின் விற்பனையாளர் உறுப்பினர் கட்டணம் ஒன்று வசூலிக்கப்படும் அதை யாரும் பேசமாட்டார்கள்.) இது வரை ஒரு பிரச்சனையும் இல்லை. சேர்ந்த பின்னர் வியாபார பயிற்சிக்கு வருமாறு கூறுவர். பயிற்சி என்பது இந்த கூட்டங்களுக்கு ஆட்களை கொண்டு செல்வதும் கூட்டங்களுக்கு தவறாது வருகை தருவதும்தான்.

ஆட்சேர்க்கும் விஷயத்தில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதிமுறையை கொண்டுள்ளன. ஒரு நிறுவனம் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்து விடலாம் என்றும் ஒரு நிறுவனம் இரண்டே இரண்டு பேரை சேர்த்து விட்டால் போதும் என்றும் பல விதங்களில் கூறப்படும். இது கேட்க எளிதாக இருக்கும் செயல்படுத்தும்போது மலையை இழுக்கும் விஷயம் என்று புரியும்.

இதற்கு பல காரணங்கள் கூறப்படலாம் எம்எல்எம் என்பது நமது நாட்டிற்கு புதியது, புரிவது கடினம் என்று. அடுத்தது, இந்த நிறுவனங்களை பற்றி யாருக்கும் தெரியாது(இதற்கு அவர்கள் கூறும் பதில் எம்எல்எம்-க்கு எதிரான விளம்பரங்களை நிறுவனங்கள் செய்வதில்லை என்பது. ஆனால் தங்களை பற்றி பிரபலமாக கூறும் இந்த நிறுவனங்களை பற்றி பத்திரிகைகள், டிவிக்கள், அல்லது வர்த்தக பத்திரிகைகள் கூட எழுதாததுதான் ஆச்சரியமான விஷயம்).

தேவையில்லாத பொருட்கள் / கூடுதல் விலை
அடுத்தது விற்பனை செய்யச் செர்ல்லும் பொருட்கள். இவை ஒன்றுக்கும் ஆகாத பொருட்களாக அல்லது தேவையே இல்லாத பொருட்களாக இருக்கும். இவற்றின் விலையும் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கும்.

சில நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் பைக், இன்ஷூரன்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றன. பைக்-களை ஷோரூம்களில் வாங்குவதுடன் ஒப்பிட்டால் விலையில் 2-3 ஆயிரங்கள் கூடுதலாக விற்கப்படுகிறது. கேட்டால் எம்எல்எம் என்றால் அப்படித்தான் என்கிறார்கள்.

ஆனால் உண்மையில் ஒரு நிறுவனம் எம்எல்எம் முறையில் வியாபாரம் செய்கிறது என்றால் ஒரு பொருளின் விலை எம்ஆர்வி-யிலிருந்து (அதிகபட்ச விற்பனை விலை) குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் எம்ஆர்பி விலையை விட சிறிதளவு அதிகமாக அல்லது மிக அதிகமாக விற்பனை செய்கின்றன. இது எம்எல்எம் வர்த்தகத்திற்கு எதிரானது.

சிலர் நிறுவனங்களில் சேர்ந்து விட்டாலும் வேலை எதுவும் செய்யாமல் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு மேலே இருப்பவர்கள் உங்களை தூண்டி சம்பாதிக்க தூண்டுவார். அல்லது உங்களது நிம்மதியை கெடுத்து விடுவார். ஆனால் சில நிறுவனங்கள் சேர்ந்தாச்சு, விஷயங்களை கூறிவிட்டோம், பொருட்கள் இருக்கின்றன, அவற்றை விற்பனை செய்வதும் ஆள்சேர்ப்பதும் உங்களது திறமை என்று விட்டுவிடுவார்கள். இதில் சேர்ந்து விட்டவர்கள் தங்களால் இயன்ற அளவு வேலை செய்துவிட்டு பின்னர் பணம் போனால் போகிறது என்று விட்டுவிடுவார்கள். சிலர் முடிந்தவரை பார்ப்போம் என்று முடிந்த வரை ஆள் சேர்ப்பர்.

ஆனால் அதிகமான ஆட்களை சேர்த்து விடுவதில் உள்ள நிபந்தனைகள், தங்க நாணயம் போன்ற விலை அதிகமான பொருட்களை அல்லது தேவையில்லாத பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்தல் போன்றவை வியாபாரமே இல்லை மோசடி வேலை என்று கூறும் அளவிற்கு உள்ளன. கோல்ட் கொஸ்ட் நிறுவனத்தை பொறுத்தவரை ரூ. 30,000 கட்டணத்தில் ஒரு தங்க நாணயத்தை வாங்கி விற்பனையாளராக சேர வேண்டும். அந்த நாணயத்தின் விலை ரு. 10,000 இருக்குமா என்பது சந்தேகமே.

1 comment: